கட்சியின் பிரதான கொள்கைகள்
-
இந்து வர்ணாசிரம சாதிய அடுக்கு முறையை வேரறுத்தல்.
-
சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் அனைத்து வகையான பாகுபாடுகளையும் எதிர்த்தல்.
-
தமிழ் மக்களிடையே சமத்துவச் சமுதாயத்தைக் கட்டமைக்க உறுதி செய்தல்.
-
தமிழ் மக்களின் மொழி, பண்பாடு மற்றும் கலாச்சார அடையாளங்களை மீட்டெடுத்து வலுவான தமிழ்த் தேசியத்தை நிறுவுதல்.
-
சுரண்டல் மிகுந்த முதலாளித்துவ கொள்கைகளை எதிர்த்து உழைக்கும் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்தல்.
-
பெண் விடுதலையை உறுதி செய்தல்.
கொள்கைகளின் அடிப்படை காரணிகள்
சாதி ஒழிப்பு
இந்து சாதிய அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள தீண்டாமை உள்ளிட்ட அனைத்து வகையான சாதியப் பாகுபாடுகளை முற்றிலும் வேரறுக்க புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் "கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்" எனும் தத்துவத்தின் மூலம் இலக்கை அடைதல்.
சமூக நீதி மற்றும் சமத்துவம்
தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை மக்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகளுக்காகப் போராடுதல், பிறப்பால் உயர்வு தாழ்வற்ற சமத்துவச் சமுதாயத்தை அமைத்திட உறுதி செய்தல்.
பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் கருத்துக்களை பின்பற்றி, மக்களிடையே நிலவும் மூடநம்பிக்கைகள் மற்றும் அர்த்தமற்ற மத சடங்கு சம்பிரதாயங்களை நிராகரித்து, அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்து, சுயமரியாதை மிக்கதொரு அறிவுசார் சமூகத்தை உருவாக்க பாடுபடுதல்.
தலித்தியம்
சாதி, மொழி, மதம், பாலினம் மற்றும் பிற சமூக முரண்பாடுகளால் ஒடுக்கப்பட்டு, சிறுபான்மையினராகச் சிதறடிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் முழுமையான விடுதலைக்காகப் பாடுபடுதல்.
மண்ணுரிமை மற்றும் தொழிலாளர் நலன்
நிலமற்ற தலித் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மீது தொடுக்கப்படும் சாதிய நிலவுடைமை ஆதிக்க அடக்குமுறை மற்றும் சுரண்டலிலிருந்து உழைக்கும் மக்களை மீட்டெடுத்தல், அமைப்புசாராத் தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் மற்றும் அடிப்படை உரிமைகளை வென்றெடுத்து, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல்.
பெண் விடுதலை
பெண்களின் கல்வி, பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் சமூக உரிமைகளை வலியுறுத்தி குடும்பம் மற்றும் சமூக மட்டத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து, முழுமையான பெண் விடுதலையை உறுதி செய்தல்.
மதச்சார்பின்மை
மதவாத அரசியலைத் தீர்க்கமாக எதிர்ப்பதோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக் கோட்பாடுகளை நிலைநாட்டி, அனைத்து மதத்தினரும் அச்சமின்றி, சம உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்தல்.
சனநாயகப் பாதுகாப்பு
அரசாங்கம் என்பது மக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தல், சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்கள் நடைபெற்று, அதன் மூலம் அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவம் மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்யும் உண்மையான மக்களாட்சியை நிறுவுதல்.
தமிழ்த் தேசியம்
தேசிய இனமான தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், மரபு மற்றும் தாயகம் ஆகியவற்றின் நலன்களை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் மற்றும் தமிழ் சமூகத்தை சாதியற்ற சுயமரியாதையுள்ள சமத்துவ சமுதாயமாக மாற்றிட உறுதி செய்தல்.
கொள்கை ஆசான்கள்
கௌதம புத்தர்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சனாதனத்தை எதிர்த்து போராடிய முதல் புரட்சியாளர் மகான் கௌதம புத்தர் அவர்கள். எல்லா மதங்களும் வழிபாட்டிற்குரியது கடவுள் என்று போதித்த போது, வழிபாட்டிற்குரியது அறம், நல்லறம் என்று கற்பித்தவர் புத்தர். தம்ம போதனைகளை கற்பித்து உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அமைதி மற்றும் ஞானத்திற்கு வழிகாட்டியாக உள்ளவர்.
பாரத ரத்னா புரட்சியாளர் டாக்டர் பி ஆர் அம்பேத்கர்
உலகின் உன்னதமான ஆளுமைகளில் ஒருவர் உலகின் மிக நீளமான அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய தலைமை சிற்பி, நாட்டின் முதல் சட்ட அமைச்சர், சமூக ரீதியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய அம் மக்களின் ஒப்பற்ற தலைவர், இந்து சமூகத்தில் உள்ள பெண்களின் சம உரிமைகளுக்காக போராடிய மாபெரும் சீர்திருத்தவாதி, பொருளாதார வல்லுநர், வழக்கறிஞர், சிந்தனையாளர், கல்வியாளர், சமூக போராளி.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
தமிழ்நாட்டில் பிறந்த சமூக சீர்திருத்தவாதி, பகுத்தறிவுவாதி, சாதி அமைப்பு, மூட நம்பிக்கைகள் மற்றும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய களப்போராளி, சுயமரியாதை இயக்கம் தொடங்கியவர், திராவிடர் கழகத்தை நிறுவியவர், சமூகநீதி, பெண்ணுரிமை மற்றும் தமிழ்மொழி, இந்தி திணிப்பு எதிர்ப்பு என களமாடியவர், திராவிட அரசியலுக்கு தமிழ்நாட்டில் வழி வித்திட்ட மாபெரும் தலைவர்.
தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்
இந்திய ஒடுக்கப்பட்டோரின் அரசியல் வரலாற்றில் பாபா சாகிப் அம்பேத்கருக்கு முன்னோடியாகவும், சக பயணியாகவும் இருந்தவர், பறையர் மகாஜன சபையை உருவாக்கி ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடியவர், மெட்ராஸ் மாகாண சட்ட மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு, நில உரிமை, ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமைகளுக்காக போராடியவர், லண்டனில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் வட்டமேசை மாநாடுகளில் அம்பேத்கருடன் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக கலந்து கொண்டு ஒடுக்கப்பட்டோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பில் உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் இரட்டை வாக்குரிமை ஆகியவற்றை வலியுறுத்தியவர்.
பண்டித அயோத்திதாசர்
தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்பு போராளி, சமூக சீர்திருத்தவாதி, தமிழ் அறிஞர், சித்த மருத்துவர், பத்திரிக்கையாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர், திராவிட இயக்கத்தின் முன்னோடி, தமிழ் மண் என்ற பத்திரிகையை தொடங்கி சாதி எதிர்ப்பு, திராவிட அடையாளம் மற்றும் சமத்துவம் குறித்து எழுதியவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
மேதகு பிரபாகரன்
வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர், உலகத் தமிழர்கள் அனைவராலும் தமிழ் தேசிய தலைவராக கொண்டாடப்படுபவர், தமிழ் ஈழ விடுதலைக்காக இளம் வயதிலிருந்து போராடியவர், தமிழீழ விடுதலைப் படை எனும் பெரிய ராணுவப் படையினை வழி நடத்தியவர்.
எங்கள் புரட்சிகர முழக்கங்கள்
அடங்க மறுப்போம்! அத்து மீறுவோம்! திமிறி எழுவோம்! திருப்பி அடிப்போம்!
அமைப்பாய்த் திரள்வோம்! அங்கீகாரம் பெறுவோம்! அதிகாரம் வெல்வோம்!
நெருக்கடிகள் சூழ்ந்த போதும் - கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்!