அண்ணன் பிரபாகரன் அவர்கள் பெரியாருக்கும் அவரது சமூகநீதி சிந்தனைகளுக்கும் எதிரானவர் அல்ல;
ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்.
23-01-2026 அன்று சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்வில் நான் உரையாற்றினேன். அப்போது தமிழ்த் தேசியமும் தமிழீழத் தேசிய விடுதலை அரசியலும் சமூக விடுதலையையும் உள்ளடக்கிய அரசியல் விடுதலையாகும் என்பது அண்ணன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நிலைப்பாடு என விளக்கினேன். சாதி, மதம் குறித்து அவரின் புரட்சிகர-சனநாயக-முற்போக்கு பார்வையையும் சுட்டிக்காட்டினேன்.
2002, 2004 ஆண்டுகளில் வன்னியில் அவரைச் சந்தித்த அனுபவங்களையும் பகிர்ந்தேன். குறிப்பாக 2002ல் யாழ்நகரில் நடந்த “மானுடத்தின் தமிழ்க்கூடல்” நிகழ்வில் ‘சாதியற்ற தமிழீழம்’ குறித்து பேசியதையும், பின்னர் வன்னியில் அவரைச் சந்தித்ததையும் நினைவுகூர்ந்தேன். தமிழீழத்தில் சாதியச் சிக்கல்கள் எழும்போது இயக்கம் தலையிட்டு நடவடிக்கை எடுத்ததாகவும், இயக்கத்தில் சாதிய உணர்வுகளுக்கு இடமில்லை என அவர் தெரிவித்ததாகவும் கூறினேன்.
அண்ணன் பிரபாகரன் அவர்கள் பெரியாருக்கும் அவரது சமூகநீதி சிந்தனைகளுக்கும் எதிரானவர் அல்ல; சாதியச் சமூக கட்டமைப்புக்கு எதிரானவரே என வலியுறுத்துவதே எனது நோக்கம். அவரது சாதிமறுப்புத் திருமணத்தையும், சாதி சிக்கல்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளையும் அதற்காகவே குறிப்பிட்டேன். ஆனால் என் உரை, ‘சாதியத்தை எதிர்த்தார்’ என்பதற்கு பதிலாக ‘காதலுக்காக தண்டனை வழங்கினார்’ எனப் பிறழ்ந்து பொருள் கொள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
அவரது பெருமைக்கும் வீரத்திற்கும் எந்த வகையிலும் களங்கம் விளைவிக்க எனக்கு எண்ணமில்லை. “இங்கே அண்ணன் நான் இருக்கிறேன்; அங்கே நீங்கள் தைரியமாகப் போராடுங்கள்” என்று என்னை ஊக்குவித்த அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி தவறான புரிதல் உருவாகியிருந்தால் அதற்கு நான் மனமாறி வருந்துகிறேன்.
இவண்
தொல்காப்பியன் திருமாவளவன்.
புகைப்பட தொகுப்பு