"தமிழகத்தில் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கே தெரியும்.." திருமாவளவன்

அண்மைச் செய்திகள் 1 மாதம் முன் February 11, 2026

டெல்லி: தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பதைத் தெரிந்ததால் தான் பாஜக பட்ஜெட்டிலும் எந்தவொரு நிதியையும் ஒதுக்கவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து விடக்கூடாது என்கிற உள்நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறதா என்ற கேள்வியையும் இது எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு கடந்த பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பான விவாதம் இப்போது நடந்து வருகிறது. அதன்படி புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்த திருமாவளவன், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று சாடினார்.

தலைவர் அவர்கள்:

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், "இந்த பட்ஜெட் விளிம்புநிலை மக்களுக்கு விரோதமான ஒரு பட்ஜெட். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது. அது மட்டுமில்லாமல் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி அல்லாத பிறமொழி பேசும் மாநிலங்களைக் குறிவைத்து, பாஜக ஆட்சியில் இல்லாத அல்லது ஆள முடியாத மாநிலங்களைக் குறிவைத்து, புறக்கணிக்கும், வஞ்சிக்கும் ஒரு பட்ஜெட்டாக இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்கவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஏற்கனவே சமக்ரா சிக்ஷா, ஜல்ஜீவன் மிஷனுக்காக நிதி மறுக்கப்பட்டுள்ளது. புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டுள்ளது. நிதியைப் பகிர்வு செய்வதற்கு 50%ஆக உயர்த்த வேண்டும் என 16வது நிதிக்குழுவுக்கு மாநிலங்களின் சார்பில் விடுத்த கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மீண்டும் அதே 41%த்தை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

தமிழகத்திற்கு எதிரான பட்ஜெட்:

அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டுக்கு 4% மட்டுமே கிடைக்கும். அதிலும் தற்போது 1200 கோடி ரூபாயை இந்த பட்ஜெட்டில் குறைத்திருக்கிறது. கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. அதுபோல தொழில் வளர்ச்சி பெற்று வரும் ஓசூரில் விமான நிலைய கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து விடக்கூடாது என்கிற உள்நோக்கத்தோடு இவ்வாறு செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

வஞ்சிக்கும் மத்திய அரசு:

100 நாள் வேலைத் திட்டத்தைப் பெயரை மாற்றி அறிவித்திருக்கிறீர்கள். 125 நாள் வேலையாக உயர்த்தி இருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறீர்கள். ஆனால் வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அந்த 100 நாள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அதற்கான விதிமுறைகளை வரையறைகளைத் திருத்தம் செய்திருக்கிறீர்கள்.

தமிழ்நாடு வளர்ச்சியை அடைந்த மாநிலம் ஆகவே அங்கு 100 நாள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தேவையில்லை என்கிற அடிப்படையிலே இந்த வரையறைகள் திருத்தப்பட்டிருக்கின்றன. கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சியில் இன்றைக்கு இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்கிற தகுதியைப் பெற்றிருக்கிற ஒரு மாநிலம் தமிழ்நாடு. அந்த மாநிலத்தை மேலும் ஊக்கப்படுத்த வேண்டிய அரசு, மாறாகத் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் உள்நோக்கத்தோடு செயல்படுவது கவலை அளிக்கிறது.

வெல்ல முடியாது:

பீகாருக்கு தேர்தல் நடந்தபோது புதிய புதிய திட்டங்கள் பீகாருக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் விரைவில் தமிழ்நாட்டிலே தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காகவாவது நிதி ஒதுக்கீடு செய்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் எந்தப் பயனும் இல்லை அங்கே ஆட்சி வர முடியாது என்பதை பாஜக உணர்ந்து கொண்டு மறைமுகமாக உணர்த்துவது போல இருக்கிறது.

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவதற்கு எந்த ஏற்பாடும் இந்த பட்ஜெட்டிலே இல்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒட்டுமொத்தத்தில் தமிழ்நாட்டை இந்த பட்ஜெட் வஞ்சித்திருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

எங்களை பின்தொடருங்கள்