மகாத்மா காந்தியின்பெயரிலான 'நூறு நாள் வேலைத் திட்டத்தை' ஒழிக்கும் முயற்சியைக் கைவிடுக!
மகாத்மா காந்தியின்பெயரிலான 'நூறு நாள் வேலைத் திட்டத்தை' ஒழிக்கும் முயற்சியைக் கைவிடுக!
ஃபாசிச பாஜக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்கில் புதிய சட்டத் திருத்த மசோதா (விக்சித் பாரத் ஜி ராம் ஜி) ஒன்றை மோடி அரசாங்கம் இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது; திரும்பப்பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
ஏழை மக்கள்மீது மோடி அரசு தொடுத்துள்ள இந்த ஃபாசிசத் தாக்குதலை முறியடிக்க அனைத்துத் தரப்பு சக்திகளும் முன்வரவேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இயற்றப்பட்ட முக்கியமான ஒரு சட்டமாகும். இந்த சட்டத்தின் அடிப்படையில் ஊரகப்பகுதிகளில் இருக்கும் மக்கள் தம்மை இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை பெறலாம். உலகிலேயே வேறெங்கும் இல்லாதவாறு வேலை கொடுப்பதை சட்டத்தின் அடிப்படையிலான ஒரு உரிமையாக இந்த சட்டம் வரையறுத்தது. இதனால் கிராமப்புறங்களில் இருக்கும் கோடிக்கணக்கான நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் வறுமையிலிருந்து மீண்டனர். விவசாய வேலை இல்லாத காலங்களில் அவர்களுக்குக் குறைந்தபட்ச வருமானத்தைத் தரக்கூடியதாக இந்தத் திட்டம் இருந்தது. கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இது பெருமளவில் உதவியாக அமைந்தது.
2014 ஆம் ஆண்டு பதவியேற்றதுமே மோடி அரசு இந்தத் திட்டத்தை ஒழித்துக் கட்டப் பார்த்தது. அப்போது எழுந்த எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சியைக் கைவிட்டு இதற்கு ஒதுக்கப்படும் நிதியைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்கள் தமது வேலை அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்; பயோ மெட்ரிக் முறையில் ரேகைகளைப் பதிய வேண்டும் என ஆனைக கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களை இந்தத் திட்டத்திலிருந்து மோடி அரசு நீக்கியது. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக இந்த திட்டத்தைக் கொலை செய்து கொண்டிருந்த மோடி அரசு, இப்பொழுது இதை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கு முடிவெடுத்து இந்த சட்ட திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிராமப்புற மக்களைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருந்த மகாத்மா காந்தி அடிகள் பெயரில் இந்த திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. மகாத்மா காந்தியடிகளைப் படுகொலை செய்தவர்களுடைய கருத்தியலால் வழிநடத்தப்படும் மோடி அரசாங்கமோ, மகாத்மா காந்தியின் பெயரை இந்தத் திட்டத்திலிருந்து இப்போது நீக்கி இருக்கிறது. இது மகாத்மா காந்தியடிகளுக்கு செய்யப்பட்ட அவமரியாதை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தேசத்தையும் அவமதிப்பதாகும்.
இந்தத் திட்டத்தில் ஊதியம் முழுவதும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது. அதை இந்த மசோதாவில் மாற்றியுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களுக்கும் சில யூனியன் பிரதேசங்களுக்கும் மட்டும் ஊதியத்தில் 90% ஐ ஒன்றிய அரசு கொடுக்குமென்றும் இதர மாநிலங்களுக்கு ஒட்டுமொத்த செலவில் 60% மட்டுமே இனி ஒன்றிய அரசு தரும் எஞ்சியுள்ள 40 % ஐ மாநில அரசுகள் கொடுக்க வேண்டும் என்று இந்த மசோதா கூறுகிறது. இது கடுமையான நிதிச் சுமையை மாநில அரசுகளின் தலையில் சுமத்துகிறது. இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இனிமேல் ஒன்றிய அரசு குறிப்பிடும் பகுதிகளில் மட்டும்தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று புதிய மசோதா கூறுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்கள் வேலை கேட்டால் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என ஏற்கனவே இருந்த சட்டம் கூறுகிறது. ஆனால் இந்தப் புதிய மசோதாவோ குறிப்பிட்ட தொகையை மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்குமெனவும், அதை ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் சில வரையறைகளின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு வழங்கும் எனவும் கூறுகிறது. ஏற்கனவே பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை கொடுக்காமல் மோடி அரசாங்கம் முடக்கி வைத்துள்ளது. அது போலவே இந்த நிதியையும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குக் கொடுக்காமல் முடக்கி வைப்பதற்கு இது வழி வகுக்கும்.
ஒட்டு மொத்தத்தில், கிராமப்புற நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு இருந்த கொஞ்சநஞ்ச பொருளாதாரப் பாதுகாப்பையும் ஒட்டுமொத்தமாக மோடி அரசு ஒழித்துக்கட்ட முயற்சித்துள்ளது.
இந்திய விவசாயிகளை வேளாண் சட்டங்களின் மூலம் ஒழித்துக்கட்ட முயற்சித்த மோடி அரசாங்கம், இப்போது விவசாயத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்க முற்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டபோது அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்புமாறு வலியுறுத்தினர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் இந்த மசோதாவை மோடி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் விட்டுக் கொடுக்காத போராட்டத்தின் காரணமாகவே வேளாண் சட்டங்களை மோடி அரசாங்கம் திரும்பப் பெற்றது. அதைப்போலவே இந்த சட்ட மசோதாவையும் திரும்ப பெற வைப்பதற்கு அனைத்து சனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
புகைப்பட தொகுப்பு