என் உயிரின்உயிரானவிடுதலைச் சிறுத்தைகளே வணக்கம் !
என் உயிரின்உயிரானவிடுதலைச் சிறுத்தைகளே வணக்கம் !
கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம், மண்டல நிர்வாகம், மாநில நிர்வாகம் என அவ்வப்போது பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு எனது முகநூல் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றை மிகவிரைவாக, முழுமையாக நிறைவேற்றிட வேண்டும். சட்டமன்றப் பொதுத்தேர்தல் மிகவும் நெருங்கிவிட்டது. இந்நிலையில், ஒரு சில நாட்களில் மாவட்ட நிர்வாகப் பொறுப்புகள் அனைத்தையும் அறிவித்தாக வேண்டும்.
ஓய்வின்றி உறக்கமின்றி ஓடிக்கொண்டே அன்றாடம் ஆற்றிவரும் பல்வேறு பணிச் சுமைகளுக்கிடையில், இந்தப் பணிகளுக்கும் அவ்வப்போது நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு நாளும் பத்துமணி நேரம், பதினைந்து மணிநேரம் என பெரும்பாலான நேரம் கட்சித் தோழர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பார்வையாளர்களைச் சந்திப்பதிலேயே செலவழிகிறது. எனவே, நேரில் வந்து சந்தித்து நெருக்கடிகள் தருவதை இயக்கத் தோழர்கள் முற்றாகத் தவிர்த்திட வேண்டுகிறேன். எதுவாயினும் அறிவிக்கும் பொறுப்புகளை மனமுவந்து ஏற்றுப் பணியாற்றிட வேண்டுகிறேன். ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தாலும் தேர்தலுக்குப் பின்னர் ஆற அமரப் பேசி முடிவுசெய்வோம். உங்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்து உரிய மீளாய்வு செய்து ஏதுவான சூழலிருப்பின் இயன்ற வகையில் ஒருசில மாற்றங்களையும் செய்துவருகிறேன். மேலும் அத்தகைய தேவைகள் இருப்பின் அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இயலும். எனக்கு உங்களின் அன்பும் ஒத்துழைப்பும் தான் பெருமளவில் ஊக்கம் தரும். எனவே, என் நிலைமைகளை உணர்ந்து, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, எனக்காகப் பொறுத்து முழுமையான ஒத்துழைப்பை நல்கிட வேண்டுகிறேன்.
மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்:
--------------------------------
234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு முழுமையடைந்து விட்டது.
இனி அவற்றில் மாற்றங்கள் ஏதும் இல்லை. இதுவே இறுதியானது.
04.02.2026 நாளிட்ட அறிவிப்பில்
ஒரு சில மாவட்ட செயலாளர் நியமனங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, நாகர்கோவில் முகமது ஷேக் மற்றும் காங்கேயம் பிரதீப்குமார் ஆகிய மாவட்ட செயலாளர்கள் இருவரும் தாமே முன்வந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்கள் அப்பொறுப்புகளிலிருந்து மாற்றப்பட்டு, அவர்களின் விருப்பப்படியே வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கம் தொகுதி மாவட்டச் செயலாளர் தன்ராஜ், திருவண்ணாமலை தொகுதியில் வாக்காளராக இருப்பதால் அவர் அப்பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, மண்டலத் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைக்குடி மாவட்ட செயலாளர் தேன்மொழி, மகளிர் விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலாளராகவும்; திண்டிவனம் மாவட்ட செயலாளர் மரக்காணம் நாகராஜன் மண்டல துணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் அப்பொறுப்பிலிருந்து விடுவித்தமைக்கு நானே முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தம்பி நாகராஜன் அவர்களும் தங்கை தேன்மொழி அவர்களும் எனக்காக இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமெனவும் எனது இம்முடிவுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
மண்டலப் பொறுப்பாளர்கள்:
---------------------------
மண்டலச் செயலாளர் உள்ளிட்ட மண்டலப் பொறுப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தைச் சிறப்புற நடத்துவதற்கு உரிய வழிகாட்டுதல்களைச் செய்வதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மகளிர் விடுதலை இயக்கம், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை, தொழிலாள் விடுதலை முன்னணி, முற்போக்கு மாணவர் இயக்கம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான இயக்கங்கள் போன்ற துணை நிலை அமைப்புகளை வலுப்படுத்துவதற்குரிய ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வார்கள். அவ்வமைப்புகளின் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் கலந்தாய்வு செய்து களப்பணிகளுக்கான செயல்திட்டங்களை வரையறுத்தல், தேவையான சூழல்களில் போராட்டங்களை நடத்துவதற்குரிய வழிகாட்டுதல்களை வழங்குதல் போன்ற பணிகளையும் செய்வார்கள். எந்த வகையிலும் கட்சி நிர்வாகத்திற்கு அவர்கள் இடையூறாக செயல்பட மாட்டார்கள். அதற்கேற்ப அவர்களுக்கு தலைமையிலிருந்து தொடர்ச்சியான பயிற்சி வகுப்புகள் நடைபெறும். எனவே, மண்டலப் பொறுப்பாளர்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
அதேபோல, ஒன்றியம், நகரம், பேரூர், மாநகரம் போன்ற பகுதிகளில், கட்சி மற்றும் துணை நிலை அமைப்புகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்வதில் மாவட்ட செயலாளர்களுக்கு மண்டலப் பொறுப்பாளர்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். அதாவது, இந்நியமனங்களில் மண்டலப் பொறுப்பாளர்கள் எவ்வகையிலும் மாவட்ட செயலாளர்களுக்கு அழுத்தங்களைத் தர இயலாது. அப்பணிகளை மாவட்ட செயலாளர்கள் விரைந்து செய்திட உரிய வழிகாட்டுதல்களைத் தந்து ஊக்கமளிக்க வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்புதான் மண்டலப் பொறுப்பாளர்களின் கடமையாகும்.
கட்சியின் மாவட்டச் செயற்குழு, துணை நிலை அமைப்புகளின் மாவட்ட நிர்வாகக் குழுவைக் கூட்டுவதற்கும் அப்போது அவற்றுக்கான குறிப்பேடுகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பராமரிப்பதற்கும் தேவையான சூழல்களில் வழிகாட்டுதல் செய்வார்கள். மாவட்டம், ஒன்றியம் உள்ளிட்ட நிர்வாகத் தளங்களில் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு ஆகியவற்றை கட்சியின் அந்தந்த மட்டத்திலுள்ள செயலாளர்கள் தான் கூட்ட வேண்டும். மண்டலச் செயலாளர்களுக்கு அவற்றைக் கூட்டும் அதிகாரம் இல்லை. ஆனால், உரிய காலத்தில் மாவட்ட செயலாளர்களுக்கு வழிகாட்டவும் அறிவுறுத்தவும் அதிகாரமுண்டு.
மண்டலத் துணை செயலாளர்கள்:
--------------------------------
இரண்டு தொகுதி மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் மூவரும் பொது நிர்வாகத்திற்கென ஒருவரும் என நான்கு மண்டலத் துணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலச் செயலாளர் உட்பட மொத்தம் ஐவர் மண்டலப் பொறுப்பாளர்களாக ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மண்டலச் செயலாளருக்கு இந்த நால்வரும் உற்றத. துணையாக செயல்பட வேண்டும். அவர்களில் பொது நிர்வாகத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள மண்டலத் துணை செயலாளர், பிற மண்டலத் துணை செயலாளர்களுக்கான தகவல் தொடர்புகள், மண்டல நிர்வாகத்துக்கான ஆவணப் பராமரிப்புகள், மண்டல அலுவலகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள். மண்டல நிர்வாகம் குறித்து பின்னொரு நாளில் விவரமாகப் பதிவு செய்யவுள்ளேன்.
மாவட்ட நிர்வாகமும் மண்டலப் பொறுப்பாளர்களும் இணைந்து நல்லிணக்கத்தோடு கட்சியின் வளர்ச்சிக்குப் பாடாற்றிடவேண்டும்.
அதிகாரமே வலிமை:
--------------------
அதிகாரமே ஒவ்வொருவரையும் வலிமைப்படுத்துகிறது. கட்சி அதிகாரம் என்பது நாம் அமைப்பாவதன் மூலம் நாமே உற்பத்தி செய்வதாகும். அதனை ஒவ் வொருவரும் நுகர்ந்திட வேண்டுமென்னும் உயரிய நோக்கில் தான் இத்தகைய அதிகாரப்பகிர்வை நமது கட்சிக்குள்ளேயே நாம் நடைமுறைப்படுத்துகிறோம்.
அதிகாரப் பகிர்வு என்பது சனநாயகத்தின் முதன்மையான-அடிப்படையான கூறுகளுள் ஒன்றாகும். அதனைக் கருத்தில்கொண்டே இத்தகைய நிலைபாட்டினை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதில் கூர்மையாக உள்ளேன். உங்கள் ஒவ்வொருவரையும் அதிகாரத்தை நுகரச் செய்து அதன்மூலம் தலைமைத்துவத்தை உணரச் செய்வதே என் விழைவாகும். இதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகும்.
என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பும் நம்பிக்கையும் தாம் என்னைத் துடிப்புடன் இயங்க வைக்கிறது. தொடர்ந்து என்னை இயக்கிக் கொண்டே இருக்கிறது.
இணைந்தே இயங்குவோம்!
இணைந்தே வெல்லுவோம்!
இவண்:
தொல். திருமாவளவன்.